ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் காசிக்கு புனித யாத்திரையாக செல்வதை கடமையாகவும் பெருமையாகவும் கருதி செயல்படுகின்றனர். அவ்வாறு செல்வோருக்கு சரியாக வழிகாட்டி உதவ யாரும் இல்லாமல் பெரிதும் சிரமப்படுவர். அந்த சிரமங்களை குறைக்கும் வகையில் இந்த அருமையான நுால் உருவாக்கப்பட்டுள்ளது.
புனித யாத்திரையாக காசி சென்றால் எந்தெந்த படித்துறையில் நீராட வேண்டும்... கங்கை நதியின் மகிமை, தீபாவளி பண்டிகையன்று காசியில் என்னென்ன விசேஷங்கள் நடந்து வருகின்றன என்பது பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
காசி நகருக்கு புனித யாத்திரை செல்வோர் ஏதாவது ஒன்றை அங்கு விட்டுவிட்டு வரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எதை விட்டுவர வேண்டும் என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது போன்று யாத்திரை செல்வோருக்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளன.
மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பர். இந்த புத்தகம் அளவில் சிறியதாக இருந்தாலும், கொட்டிக் கிடக்கிற விஷயங்கள் அளவிட முடியாதவை. காசியில் பூக்கள் வாங்கினால் எப்படி இருக்கும்; அந்த நகரில் பறக்காத பறவை எது போன்ற அபூர்வ தகவல்களும் அடங்கியுள்ளன.
வாழ்வின் கடைசி காலத்தை காசியில் வாழ விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் அறியத்தருகிறது. இந்த நுால் உங்கள் கையில் இருந்தால் காசியை பற்றி முழுமையாக அறியலாம்.
பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. காசிக்கு செல்லும் அன்பர்கள் இந்த புத்தகத்தை கையில் வைத்திருந்தால் பயணம் இனிதாக அமையும்.
– தி.செல்லப்பா