வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்களை உளவியலோடும் அணுகலாம்; உள்ளன்போடும் அணுகலாம். இது, உளவியலை அன்பால் உன்னதமாக்கிய கதை. பாட்டு க் கொரு புலவன் பாரதியால் அன்பு இங்கு அமுதமானது.
கவிஞர் பாரதியின் வரிகளில் வீரம் தெறித்திடும், புதுமை நடனமிடும், பக்தி ஒளிர்ந்திடும். அது அத்தனைக்குள்ளும் ஒளிந்திருக்கும் அன்பின் வடிவங்களை அழகழகாய் வடித்து எடுத்து அன்புக் காவியமாய் அமைக்கப்பட்டுள்ளது.
பிடிக்காத கல்வி, ஒட்டுதல் இல்லாத வேலை, அதனால் உண்டாகும் ஆபத்துகள் என அடுக்கடுக்காய் காரணங்களால் பாதிக்கப்படுகிறாள் கதை நாயகி அமுதா. வாழ்க்கையே வெறுத்து மூலைக்குள் ஒடுங்கிப்போகும் இடத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது. பாரதியின் பாடல்களை மருந்தாகக் கொடுத்து அமுதாவை மீட்டெடுக்கும் கதை.
மனம் நிறைய வெறுப்பும், வேதனையும், கோபமும் கொண்டு வலி நிறைந்து வாழும் சராசரி பெண்ணின் கதையாக இதைப் பார்க்க முடியவில்லை. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடக்கும் போராட்டங்களுக்கு தீர்வு காணும் முயற்சியாகவே தோன்றுகிறது. பயம், கவலை என்னும் மாயப்பேய்களை, ‘அச்சமும் துயரும் என்றே- இரண்டு அசுரர் வந்து எமையிங்கு சூழ்ந்து நின்றனர்’ என்ற பாரதியின் வரி கொண்டு விரட்டி யிருக்கும் இடம் அற்புதம்.
பாரதியின் பாடல்களை ஆழ உழுது கிடைத்த புதையல்களை நயமாக எடுத்து, முத்துச் சரங்களாகத் தொடுக்கப்பட்டு உள்ளது. ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடலில் உள்ளபடி பாரதியின் கனவு மெய்ப்படும் வகையில் மெய் ஞானம் விதைத்திருக்கும் விதம் அருமை. உயிரோடு மட்டுமல்ல உயிர்ப்போடும் வைத்திருக்க உதவுகிறது. வாழ்க்கையை நேசிக்க கற்று தரும் நுால்.
– சுமித்ராதேவி