கணவரின் அலைபேசி எண்ணை அடையாளம் காண, ஆங்கிலத்தில் செல்லப்பெயர் சூட்டி பதிவு செய்திருப்பர் பெண்கள். ஆனால், வைரஸ் நாவலில் கதாநாயகி, மனித மூளையிலிருந்து சுரக்கும் ஒரு திரவ பெயரை சூட்டி இருக்கிறாள். இத்தனைக்கும், கணவன் அவள் மீது கடுகளவும் பாசம் வைக்கவில்லை. பொழுதுபோக்கு பொருளாகத்தான் அவளை பார்க்கிறான். அவளோ அன்புக்காக ஏங்குகிறாள்.
உண்மையாகவே காதல் செலுத்தும் கணவர் அல்லது காதலருக்கு நிச்சயமாக அந்த திரவத்தின் பெயரை சூட்டி விடுவர் நம் பெண்கள். ‘அந்த பெயரை என் காதில் சொல்லுங்களேன்’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வைரஸ் நாவல் படித்தால் அந்த பெயரை தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவமனையில் துவங்கி முடிகிறது இந்த நாவல். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நர்சுகள் படும்பாட்டை அருமையாக சித்தரிக்கிறது. எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அடக்க, எப்படி எல்லாம் விறகு கட்டை அடுக்கப்படும் என்பதை தெளிவாக படம்பிடிக்கிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நாவலின் ஒவ்வொரு வரியும் வைரம்.
உதாரணத்துக்கு ஒரு வரி... ‘செல்களின் மரபியலால் சங்கிலி போட்டு கட்டப்பட்ட நாய் தான் இந்த உடல்!’ கொரோனா நோய் பரவல் காலத்தில், நோயாளிகளை பகடைக்காயாக பயன்படுத்தி மருத்துவமனைகளில் நடந்த அட்டூழியங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நாவலில் உலா வருகின்றன.
வித்தியாசமான குணாதிசயங்களை அறிய அருமையான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்துள்ளது இந்த நாவல். மனதிலும் நீண்ட காலத்திற்கு தொற்றிக் கொண்டிருக்கும் நுால்.
– தி.செல்லப்பா